http://dinamani.com/latest_news/article1323367.ece
இந்து மடாலய நியமனங்களில் அரசுக்கோ அறநிலையத்துக்கோ எந்த அதிகாரமும் இல்லை: ஆலய வழிபடுவோர் சங்கம்
By Sriram Senkottai, சென்னை
First Published : 01 November 2012 11:04 PM IST
மதுரை ஆதீன விவகாரத்தில், மடாலய நியமனங்களில் அரசுக்கோ அறநிலையத்துறைக்கோ எந்த உரிமையும் அதிகாரமும் இல்லை; மேலும், சட்டத் திருத்தம் குறித்து பெஞ்ச் கூறியதை மறுஆய்வு செய்ய நீதிமன்றத்தை அணுக ஆலய வழிபடுவோர் சங்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
அந்த செய்திக் குறிப்பு:
மதுரை ஆதீனத்தில் நித்தியானந்தா இளைய சந்நிதனமாக நியமனம் செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட ரிட் பெடிஷன்களில் நீதிபதிகள் பானுமதி, சுப்பையா அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பின் சாராம்சம் என சொள்ளப்படுவனவற்றை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம்.
இந்நியமனம் குறித்து மதுரை சிவில் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளனவால், ரிட் பெட்டிஷன்களில் எந்த உத்தரவையும் நாங்கள் அளிக்க விரும்பவில்லை என்று நீதிபதிகள் கூறி உள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்.
அதே சமயம், அறநிலையத் துறை ஆணையருக்கு மடங்களை கூடுதலாகக் கட்டுப்படுத்தும் வகையில் கூடுதல் அதிகாரங்கள் வழங்க மாநில அரசு பரிசீலிக்கலாம் என நீதிபதிகள் கூறி உள்ளது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
மடாதிபதிகளின் பொறுப்புகளை நிர்வாகம், சமயம் என பிரித்துப் பார்க்க இயலாது என்பதை சென்னை உயர் நீதிமன்றமும்,உச்ச நீதிமன்றமும் தம் முந்தையத் தீர்ப்புகளில் மிகத் தெளிவாக நிறுவி உள்ளன. மடாதிபதி என்பவர் ஓர் சாதாரண அறங்காவலர் அல்லர். அவருடைய நிலை அறங்காவலரின் நிலையை விட மிகவும் மேம்பட்டது என்றும் இந்நீதிமன்றங்கள் ஆணித்தரமாக எடுத்து உரைத்துள்ளன.
மேலும் ஒவ்வொரு மடமும் ஒரு தனி மதச் சமூகம் ஆகும். இஸ்லாமிய, கிறிஸ்துவ தனி மதச் சமூங்கள் போல் அவற்றிற்கும் அரசியல் நிர்ணயச் சட்டம் பிரிவு 26 ன் கீழ் விசேட பாதுகாப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்தகைய தனி மதச் சமூகங்களை அரசு கையகப் படுத்த முடியாது.
தமிழ்ச் சைவ சமயத்திற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத நித்யானந்தாவை தனக்கு வாரிசாக மதுரை ஆதீனகர்த்தர் நியமனம் செய்ய முயன்றதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அதே சமயம் அந்நியமனம் குறித்து கேள்வி எழுப்ப அறநிலையத் துறைக்கோ அரசுக்கோ எந்த அதிகாரமும் உரிமையும் கிடையாது. கிறிஸ்துவ, இஸ்லாமிய மதத் தலைவர்களை அவர்கள் மத நிலையங்களில் நியமனம் செய்யப் படும் போது குறுக்கிடாத அரசு இந்து மத நிலையங்களிலும் அவ்வாறே குறுக்கிடாமல் இருத்தல் வேண்டும். இந்த பெஞ்சின் தீர்ப்பில் சட்டத் திருத்தம் குறித்து கூறப்பட்டவைகளை மறு ஆய்வு செய்ய ஆலய வழிபடுவோர் சங்கம் நீதிமன்றத்தை அணுகும்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment