Click here to read from the Source:
கொங்கு நாட்டில் ஏழு சிவத்தலங்கள் பாடல் பெற்ற தலங்களாகும். அவை கொங்கேழ் தலங்கள் எனப்படுகின்றன. அவிநாசி, திருமுருகன் பூண்டி, பவானி, திருச்செங்கோடு, வெஞ்சமாக்கூடல், திருப்பாண்டிக்கொடுமுடி, கருவூர் ஆகியன அவை. பேரூர் முதலிய பாடல் வைப்புத் தலங்களும் உள்ளன. பாடல் பெறாத தலங்களாகவும், வைப்புத் தலங்களல்லாததாகவும் இருப்பினும் சிறப்புப் பெற்ற தலங்களாக விளங்கும் கோவில்கள் பல கொங்கு நாட்டில் உள்ளன.
இக்கோயிலின் பழமையை அறுதியிட்டுக் கூற இயலவில்லை. இப்பகுதி முன்னர் அமரபுயங்க நல்லூர் என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது. அமரபுயங்கன் என்பது தேவநாகனின் பெயர். தேவநாகனால் தொழப்பட்ட கோவில் இது. எனவே இப்பெயர் வந்தது எனக் கூறுகின்றனர். இப்பகுதியை ஆட்சி செய்த அமரபுயங்கன் என்ற மன்னனின் பெயராலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.
இப்பகுதி முட்டம் என்றும், கோட்டைக்காடு என்றும் கூறப்படுகிறது. முட்டம் என்பது அதற்குமேல் கொண்டுசெல்ல இயலாதவாறு முடிந்து நின்ற முட்டான இடமாகும். பேரூருக்கு மேற்கே மூலைநாட்டில் நிலத்தின் பகுதி மலை வரை முடிந்து நிற்கும் இடத்தில் உள்ளதே வெள்ளிமலை முட்டமாகும்.
கோவிலை மீண்டும் மறுமலர்ச்சி அடையச் செய்த பெருமைக்குரியது பேரூராதீனமாகும். பேரூராதீனம் கயிலைக்குருமணி தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் தலைமையில் பேரூர் தமிழ்க்கல்லூரி மாணவர்களும், ஆசிரியப் பெருமக்களும் பலமுறை உழவாரப்பணிகள் செய்துள்ளனர். பேரூராதீனத்திலிருந்த இன்றைய பழனி சாது சண்முகம் அடிகளாரின் பணிகள் குறிப்பிடத்தக்கன.
மொரீசியஸ் நாட்டிலிருந்து வந்த சிவனடியார்கள் குடமுழுக்கில் கலந்து கொண்டு விழாப்பணிகள் பல செய்தனர். பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு இறையருளைப் பெற்றனர். இனி கோவிலைப் பற்றிப் பார்ப்போம்.
திருநாகேசுவரரின் உடனுறையும் அம்மையின் பெயர் திருமுத்துவாளியம்மை என்பதாகும். முத்துக்களால் அமைந்த காதணிகள் அணிந்திருந்தமையால் இப்பெயர் பெற்றிருக்கலாம் எனக் கூறுகின்றனர். இந்த அம்மையின் சிறப்பு அளப்பரியது.
நாகேசுவரர் சன்னதியின் தென்புறத்தில் ஆலமர் செல்வனாகிய தென்முகக்கடவுள் வீற்றிருக்கிறார். இந்தச் சிலை மிக அழகானது.
ஆர்.வி.

அத்தகைய சிறப்புப் பெற்ற தலங்களுள் ஒன்று திருமுத்துவாளியம்மை உடனமர் முட்டத்து நாகேசுவரர் திருக்கோயிலாகும். இது கோவையிலிருந்து மேற்கில் வெள்ளியங்கிரி செல்லும் சாலையில் செம்மேடு என்னும் சிற்றூருக்குக் கிழக்கில் 2 கி.மீ. தொலைவில் காஞ்சியாற்றின் மேல்கரையில் அமைந்துள்ளது.
இக்கோயிலின் பழமையை அறுதியிட்டுக் கூற இயலவில்லை. இப்பகுதி முன்னர் அமரபுயங்க நல்லூர் என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது. அமரபுயங்கன் என்பது தேவநாகனின் பெயர். தேவநாகனால் தொழப்பட்ட கோவில் இது. எனவே இப்பெயர் வந்தது எனக் கூறுகின்றனர். இப்பகுதியை ஆட்சி செய்த அமரபுயங்கன் என்ற மன்னனின் பெயராலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.
இப்பகுதி முட்டம் என்றும், கோட்டைக்காடு என்றும் கூறப்படுகிறது. முட்டம் என்பது அதற்குமேல் கொண்டுசெல்ல இயலாதவாறு முடிந்து நின்ற முட்டான இடமாகும். பேரூருக்கு மேற்கே மூலைநாட்டில் நிலத்தின் பகுதி மலை வரை முடிந்து நிற்கும் இடத்தில் உள்ளதே வெள்ளிமலை முட்டமாகும்.
கன்னியாகுமரிப் பகுதியிலும் முட்டம் என்ற ஊர் உள்ளது. வட ஆர்க்காடு மாவட்டம் செய்யாறு வட்டத்தில் உள்ள திருக்குரங்கணில் முட்டம் திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றது. பாண்டிய நாட்டின் ஒரு பகுதி இரணியமுட்ட நாடாகும். கொங்கு நாட்டில் உள்ள முட்டத்தில் அக்காலத்தில் சிறப்புடன் விளங்கிய நகரம் முட்டத்துநல்லூர் ஆகும். இரவிவர்ம சதுர்வேதி மங்கலம் என்ற பெயரும் இவ்வூருக்கு உண்டு. இப்பகுதியில் கோட்டையும், அகழியும் இருந்து அழிந்து காடாகிய காரணத்தால் கோட்டைக்காடு என வழங்கப் படுகிறது.
இக்கோயில் பல்வேறு ஆட்சி மாற்றங்களாலும், இயற்கைச் சீற்றங்களாலும் சிதைவுற்று முள்மரங்கள் முளைத்துக் கேட்பாரின்றிக் கிடந்தது. கி.பி. 1862&இல் ஆங்கில ஆட்சியில் இக்கோவிலின் சுற்றுப்புறச் சுவரிலிருந்து கற்களும், தூண்களும் பெயர்த்தெடுக்கப்பட்டு கோவை நகரில் அவற்றைக் கொண்டு சாக்கடைகள் அமைத்திருக்கின்றனர்.
பின்னர் கேட்பாரற்றுக் கிடந்த இக்கோவிலை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் தமிழாசிரியரும், தொல்லியல் அறிஞருமான புலவர் ஐ. இராமசாமி அவர்கள்.
கோவிலை மீண்டும் மறுமலர்ச்சி அடையச் செய்த பெருமைக்குரியது பேரூராதீனமாகும். பேரூராதீனம் கயிலைக்குருமணி தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் தலைமையில் பேரூர் தமிழ்க்கல்லூரி மாணவர்களும், ஆசிரியப் பெருமக்களும் பலமுறை உழவாரப்பணிகள் செய்துள்ளனர். பேரூராதீனத்திலிருந்த இன்றைய பழனி சாது சண்முகம் அடிகளாரின் பணிகள் குறிப்பிடத்தக்கன.
பேரூராதீனம், பழனி ஆதீனம் மற்றும் இறை அன்பர்களின் பேருதவியால் கோவில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு 14.06.1998 அன்று, முதல் திருக்குடமுழுக்குச் செய்யப்பட்டது. அதன் பின்னர் இரண்டாவதாக 14.12.2011 அன்று திருநெறிய தமிழ்த் திருக்குடமுழுக்குச் சிறப்பாகச் செய்யப் பட்டது.
அன்றைய நாள் காலை 10 மணி முதல் 11 மணிவரை குடமுழுக்கும், 11 மணியிலிருந்து 12 மணிவரை பதின்மங்கலக்காட்சியும், பெருந்திருமஞ்சனமும், 12 மணிக்கு அலங்காரப் பூசையும் நடைபெற்றன.
குடமுழுக்கு விழாவில் பேரூராதீனம் கயிலைமாமுனிவர் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார், இளைய பட்டம் மருதாசல அடிகளார், பழனி சாது சண்முக அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார், பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், குமாரதேவர் மடம் கல்யாணசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேசுவர சுவாமிகள், வராகிபீடம் மணிகண்ட சுவாமிகள், பேரூர் மேல்மடம் ஞானசிவாச்சாரியார் சுவாமிகள், சின்னத்தொட்டிபாளையம் கருப்பராய அடிகள், போத்தனூர் செட்டிபாளையம் காளிமுத்து அடிகள் ஆகியோர் கலந்து கொண்டு அருளுரை வழங்கினார்கள்.
கோவில் தல வரலாற்று நூலை சாது சண்முகஅடிகளார் வெளியிட சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளார் பெற்றுக் கொண்டார்.
மொரீசியஸ் நாட்டிலிருந்து வந்த சிவனடியார்கள் குடமுழுக்கில் கலந்து கொண்டு விழாப்பணிகள் பல செய்தனர். பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு இறையருளைப் பெற்றனர். இனி கோவிலைப் பற்றிப் பார்ப்போம்.
கிழக்கு நோக்கி அமைக்கப்பட்ட நான்கு தனித்தனிச் சன்னதிகளில் தென்புறத்தில் நாகேசுவரப் பெருமானும், அடுத்து முருகப் பெருமானும், அடுத்து திருமுத்துவாளியம்மையும், அதனையடுத்து குலசேகர விண்ணகரப் பெருமாளும் கோவில்கொண்டு அருள்செய்கின்றனர். தென்மேற்கு மூலையில் விநாயகப் பெருமானுக்குத் தனிச் சன்னதி அமைக்கப் பட்டுள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் உள்ளன. நவக்கிரகங்களுக்கு அருகில் பைரவருக்குத் தனிச்சன்னதி தற்போது புதிதாக அமைக்கப் பட்டுள்ளது.
தென்னை, கமுகு, கரும்பு, வாழை, மஞ்சள் எனச் சுற்றிலும் பச்சையான தோற்றம் கண்களைக் கவரும் எழில் சூழ்ந்த இப்பகுதியில் வீற்றிருந்து நாகேசுவரர் அருள்புரிகிறார். கொங்கு நாட்டில் நாகர் வழிபாடு பண்டைக்காலம் முதலே இருந்து வருகிறது. திருநாகேசுவரர் திருமேனியிலும் நாகர் வடிவங்கள் உள்ளன. இங்கு தற்போது நாகருக்குத் தனிச் சன்னதியும் உள்ளது. சிவலிங்கத்தை நாகங்கள் வழிபடும் சிற்பமும் இங்கு உள்ளது.
சிவலிங்கத்திற்குரிய ஆவுடையார் முன்னர் சதுர பீடமாக இருந்தது. தற்போது பேரூரடிகளின் வழிகாட்டுதல்படி வட்டவடிவ ஆவுடையார் சங்கராண்டாம்பாளையத்தைச் சேர்ந்த திரு. அருச்சுனன் அவர்கள் வழங்கி அது பொருத்தப் பட்டுள்ளது.
திருநாகேசுவரரின் உடனுறையும் அம்மையின் பெயர் திருமுத்துவாளியம்மை என்பதாகும். முத்துக்களால் அமைந்த காதணிகள் அணிந்திருந்தமையால் இப்பெயர் பெற்றிருக்கலாம் எனக் கூறுகின்றனர். இந்த அம்மையின் சிறப்பு அளப்பரியது.
நந்தூரும் தடம்புடை சூழ் நல்சார்வாழ் கோதே
நாலோர் புகழ்ந்தேத்தும் நளின முறை மாதே
மந்திரமா மலையரசன் ஈன்றருஞ் சேயே
மங்கையே திருமுத்து வாளி நாயகியே
என ஒரு பழம்பாடல் அம்மையைப் போற்றுகிறது. இக்கோவிலில் அம்மைக்கே மதிப்பும், சிறப்பும் மிகுதி. அம்மையின் பெயரால்தான் கோவில் இப்பகுதி மக்களால் அழைக்கப் படுகிறது.
அம்மையின் சிலை மிக அழகியது. மதுரை மீனாட்சியம்மன் சிலையைச் செய்த சிற்பிதான் இந்த அம்மையின் சிலையையும் செய்தார் என்ற ஒரு கருத்து பலரிடையே நிலவுகிறது. ஆனால் பாண்டிய நாட்டில் இத்தோற்றத்தில் வேறு எந்த அம்மை சிலையும் இல்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அம்மையின் வலது கையில் சிற்ப இலக்கணங்களோடு வடிக்கப்பட்ட நீலோற்பல மலர் உள்ளது. முன்கையில் பரியகம் என்னும் ஆபரணமும் உள்ளது. இரண்டு தோள்களிலும் கடகங்கள், மணிக்கட்டுகளில் சூடகம் என்ற வளைகள் உள்ளன. விரல்களில் மோதிரங்கள், காதுகளில் முத்து வாணிகள் குதம்பைகளோடு தோள்களில் தோய்ந்துள்ளன.
தலையில் உள்ள அழகிய முடி ஒன்பது அடுக்குகளாக பூ வேலைப்பாடுகளுடன் அழகாக அமைக்கப் பட்டுள்ளது. மூக்கில் மூக்குத்தி அணிவதற்கேற்ற மிக நுண்ணிய துளை உள்ளது.
தோள்களில் வாகு மாலைகள், கழுத்தில் சவடி, காறைகள் சிறப்பாக அமைந்துள்ளன. இடுப்பில் மேகலை சிறப்பாக விளங்குகிறது. மேகலை அணிகலனைப் பொருத்துவதற்கு ஏற்ப 16 நுண்ணிய துளைகள் உள்ளன. இந்த மேகலைத் துளைகளும், மூக்குத்தித் துளையும் இந்தச் சிலையை வடித்தவரின் கைவினைச் சிறப்புக்கு எடுத்துக் காட்டுகளாகும்.
வடபுறத்தில் குலசேகர விண்ணகரப் பெருமாள் கோயில் உள்ளது. இது சேர மன்னராகிய குலசேகர ஆழ்வார் காலத்தில் அவர் பெயரால் உண்டான கோவில் எனக் கருதப்படுகிறது. முட்டத்துக் கோயில்களில் ஒன்று வெங்கடேசப் பெருமாள் கோவில். இது சிவன் கோயிலுக்கு வடமேற்கில் உள்ளது. சிவன் கோவிலில் திருமாலுக்கும் தனிச்சன்னதி அமைக்கப்பட்டிருப்பது சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
நாகேசுவரர் சன்னதியின் தென்புறத்தில் ஆலமர் செல்வனாகிய தென்முகக்கடவுள் வீற்றிருக்கிறார். இந்தச் சிலை மிக அழகானது.
முட்டம் திருக்கோவிலில் நாள் வழிபாடு உண்டு. மாதப்பிறப்பு, பிரதோச வழிபாடு, இராகு, கேது பரிகார வழிபாடு ஆகியன செய்யப் படுகின்றன. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி இரவில் சிறப்பு வழிபாடுகள் செய்யப் படுகின்றன. சிவராத்திரி விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இராகு, கேது கோள்களால் துயர்ப்படுவோர் இங்கு பால், பழம், நீர் கொண்டு அபிசேகம் செய்து பரிகாரம் பெறலாம். இராகு, கேது தோஷ நிவர்த்தி இங்கு செய்யப்படுவதால் இக்கோவில் கொங்கு நாட்டு இராகு, கேது பரிகாரத்தலம் எனப் போற்றப்படுகிறது.
திருமணத்தடை ஏற்பட்டு நீண்டநாள் மணமாகாமலிருப்பவர்கள் இங்கு ஒரு மண்டலம் பாலாபிசேகம் செய்தால் திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை.
முட்டம் பகுதி தொல்பழங்காலம் முதல் புகழ்பெற்றது. வீரராசேந்திரன், விக்கிரமன், சடாவர்மன் சுந்தரபாண்டியன், மூன்றாம் வீர வல்லாளன் ஆகிய மன்னர்கள் கோவிலுக்குக் கொடுத்த கொடைகளைக் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இப்பகுதியில் கிடைத்த பழைய மற்றும் புதிய கற்கால ஆயுதங்கள், சுடுமண் உருவங்கள், காசுகள், சிற்பங்கள் ஆகியன பண்டைக்காலத்தில் இங்கே சிறந்த நாகரிக மாந்தர்கள் வாழ்ந்ததை எடுத்துக் காட்டுகின்றன. இப்பகுதியின் வடக்குப் பகுதியில் உள்ள வெள்ளருக்கம் பாளையத்தையொட்டிய மலைக்குகைகளில் கற்கால மக்களின் பாறை ஓவியங்கள் உள்ளன.
கோவிலின் தல மரம் வில்வமரம். தல தீர்த்தம் காஞ்சியாறு. இது பிப்பில நதி, தென் கங்கை, சிவநதி, பிரயாகை, ஒலிநதி, விருத்த கங்கை எனப் பல பெயர்களைக் கொண்டது. இந்த ஆற்றில் எலும்பினை இட்டால் அது நாளடைவில் கல்லாக மாறும். முட்டத்து வெளியில் கல்லாகிப் போன எலும்புகள் பல கிடைத்துள்ளன.
காஞ்சியாற்றின் கரையில் தவம், செபம், யோகம், வேள்வி, அறம் என எதைச் செய்தாலும் செய்பவர்கள் வீடுபேறடைவர் என்பது நம்பிக்கை. மேலும் இவ்வாற்றில் மூழ்கி எழுவோருக்குப் பல நோய்கள் நீங்கும் எனப் பேரூர்ப் புராணம் கூறுகிறது.
முட்டம் கோவிலிலிருந்து மேற்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் தென்கயிலாயம் எனக் கூறப்படும் வெள்ளியங்கிரிமலை உள்ளது. இறையன்பர்கள் இரு தலங்களையும் ஒரே நாளில் கண்டு வணங்கிப் பயன் பெறலாம்.
படங்கள் உதவி: பேரூராதீனம்.
No comments:
Post a Comment